கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், சுமார் 85,000 பேருக்கு இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஆனால் இன்று (18) மாலை சுமார் 6 மணிக்குள் அதனை வழமைக்கு கொண்டு வர முடியும் என சபை குறிப்பிட்டுள்ளது.
ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில், கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகமவுக்கு நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயில் கார் மோதியதில் நேற்று (17) அதிகாலை உடைப்பு ஏற்பட்டது.
நீர் கசிவு காரணமாக, கலட்டுவாவவிலிருந்து குறித்த குழாய் ஊடாக நீர் விநியோகத்தை நிறுத்தி, திருத்தப் பணிகளை ஆரம்பிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று காலை நடவடிக்கை எடுத்தது.
இதனால் கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டது.
பழுதடைந்த குழாயை சீரமைக்கும் பணி நேற்று இரவு துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, இன்று அதிகாலை 4 மணியுடன் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்தது.
எனினும், விநியோகம் சீரமைக்கப்பட்ட போதிலும், பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை.
இதனால் மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ள நேர விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇