தோள்ப்பட்டை ஜவ்வு அழுத்தப் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை…
தோள்ப்பட்டையில் ஏதேனும் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டாலும் எம்முடைய நாளாந்த நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை எதிர் கொள்கிறோம். அதே தருணத்தில் தோள்பட்டையில் உள்ள சவ்வு அழுத்தம் காரணமாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து பிரத்யேக சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்ப்பட்டை ஜவ்வு இறுக்கமடைதல் எனும் பாதிப்பு ஏற்படக்கூடும். விளையாட்டு வீரர்களுக்கும் சாகசங்களில் மீது தனி பிரியம் கொண்ட இளைய தலைமுறைக்கும் எதிர்பாராத விதமாக தோள்பட்டை மூட்டு விலகி பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். வேறு சிலருக்கு முதுமையின் காரணமாக அவர்களுடைய தோள்பட்டையில் இருக்கும் சவ்வு பகுதி கிழிசல் ஏற்பட்டு அல்லது சிதைந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதே தருணத்தில் டென்னிஸ் போன்ற விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கும் ஒரே மாதிரியான பணியினை தொடர்ச்சியாக செய்யும் தொழிலாளர்களுக்கும் முதுமையின் காரணமாக உள்ள வயதானவர்களுக்கும் . ஷோல்டர் இம்பீன்ச்மென்ட் சிண்ட்ரோம் எனும் தோள்பட்டையில் உள்ள சவ்வு பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் பாதிப்பு உண்டாகிறது.
தோள்பட்டையின் உள்பகுதியில் அமைந்திருக்கும் எலும்பு பதினேழு சதவீதத்தினருக்கு மட்டும் தான் இயல்பாக அமைந்திருக்கிறது. ஏனையோருக்கு தோள்பட்டையின் உள்பகுதியில் அமைந்திருக்கும் எலும்பு இயல்பாக இல்லாமல், சமச்சீரற்ற தன்மையில் தான் இருக்கும். தொடர்ச்சியாக விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், நாளாந்தம் வாழ்வாதாரத்திற்காக ஒரே மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு இத்தகைய தோள்பட்டை ஜவ்வு அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் முதுமையின் காரணமாகவும் தோள்பட்டையின் உள்பகுதியில் உள்ள எலும்பு தேய்மானம் அடைந்து இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
தோள்பட்டையில் உண்டாகும் வலி தான் இதன் முதன்மையான அறிகுறி. வலியின் காரணமாக தோள்பட்டையின் இயக்கம் குறைந்து விடும். இதனால் நாளாந்த நடவடிக்கையில் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக இரவு நேரத்தில் உறக்கமின்மை பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஆரோக்கியம் கெட்டு, சுகவீனம் ஏற்படும்.
இவர்கள் வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறும்போது அவர்கள் தோள்பட்டை பகுதியில் எக்ஸ் ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.
பரிசோதனைகளில் உங்களுக்கான பாதிப்பின் தன்மை வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ற வகையில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதன் போது கட்டாய ஓய்வு – ஐஸ் பக்கற்று ஒத்தடம் – வலி நிவாரணி மாத்திரை – பிரத்யேக உறை மற்றும் ஊசி வடிவிலான நிவாரண சிகிச்சை போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவர். மேலும் இதன் போது ஷாக் வேவ் தெரபி, இயன்முறை சிகிச்சை, லேசர் சிகிச்சை ஆகியவற்றையும் வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டுமே மேலே குறிப்பிடப்பட்ட சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்காவிடில் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களுக்கு நுண் துளை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇