பக்கவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை……
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடை முறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு இளம் வயதிலேயே பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
மேலும் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மெக்கானிக்கல் திராம்பக்டமி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
போட்டிகள் நிறைந்த உலகில் இரவு பகல் பாராது அயராது உழைக்கும் எம்முடைய இளைய தலைமுறையினர் இரவு நேரங்களில் குறிப்பாக இரவு இரண்டு மணிக்கு மேல் கோழி இறைச்சி, கோழி பிரியாணி ,வறுத்த கோழி இறைச்சி, ஆகியவற்றை பசியாறுகிறார்கள்.
இது செரிமான மண்டலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன் செரிமானத்திற்கு உதவும் இன்சுலின் எனும் சுரப்பியின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. அதே தருணத்தில் பணியாற்றும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை நிறைவு செய்ய வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால் இளைஞர்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு கோபத்திற்கும் ஆளாகிறார்கள். இந்த கோப உணர்வும் ரத்த ஓட்டத்தில் சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்குகிறது.
பொதுவாக எம்முடைய மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சமச்சீரற்றதாக இருந்தாலும் அல்லது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலும் அல்லது விவரிக்க இயலாத காரணங்களால் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் மூளையின் இயங்குத்திறன் மற்றும் செயல் திறன் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் உண்டாகிறது.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட நான்கு மணி தியாலத்திற்குள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று பக்கவாதத்திற்கான முறையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சையை மேற்கொண்டால் பக்கவாத பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
போதிய விழிப்புணர்வு இன்மை காரணமாக பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு நான்கு மணி தியாலத்திற்குப் பிறகு வைத்தியசாலைக்கு நோயாளிகள் சென்றால் அவர்களுக்கு வைத்தியர்கள் முறையான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பினை துல்லியமாக அவதானித்து அதற்கான நிவாரண சிகிச்சையை வழங்கினாலும் எதிர்பார்த்த அளவிற்கு பலன் கிடைப்பது இல்லை.
இதன் காரணமாக வைத்தியர்கள் தொடர்ந்து பக்கவாத பாதிப்பிற்கு ஆளானவர்களை நான்கு மணி தியாலத்திற்குள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இவர்களது முகம் ,இரண்டு கைகள், பேச்சு , ஆகியவற்றை பரிசோதிக்கும் வைத்தியர்கள் பக்கவாத பாதிப்பினை ஓரளவு அவதானிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் ரத்த உறைவு ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறதா? எனவும் அவதானிக்கிறார்கள்.
முதலில் இந்தத் தருணங்களில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களில் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குகிறார்கள். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் தற்போது அறிமுகமாகி இருக்கும் மெக்கானிக்கல் திராம்பக்டமி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரண சிகிச்சையை அளிக்கிறார்கள்.
இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனை எப்படி ஸ்டென்ட் மூலம் அடைப்பை அகற்றுகிறார்களோ அதே போல் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பிற்கு ஸ்டென்ட்டை பொருத்தி அடைப்பை அகற்றி ரத்த ஓட்டத்தை சீரமைத்து நிவாரணம் அளிக்கிறார்கள். இத்தகைய சிகிச்சை பலனளித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் இயன்முறை சிகிச்சையை குறிப்பிட்ட காலம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
வைத்தியர் அனந்தகிருஷ்ணன்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇