புத்தக கண்காட்சி, ஆய்வரங்குகள், உரைகள், கலை நிகழ்வுகளுடன் “புத்தகங்கள், வாசிப்பு, எழுத்து, பரவலாக்கம்” செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கடந்த 21, 22, 23 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
லண்டனில் பதிவு செய்யப்பட்ட சமூக நிறுவனமான மானுடம் அமைப்பின் நிதி அனுசரணையில் மனிதநேய தகவல் குறிப்புகள் எனும் மதகு நிறுவனத்தினால் இந்நிகழ்வு நடாத்தப்பட்டதுடன் இதற்கான ஒருங்கிணைப்பாளராக பௌசர் மஹ்ரூப் செயற்பட்டார்.
புத்தக கண்காட்சியில், தமிழகத்திலுள்ள பல பதிப்பகங்களும், இலங்கை பதிப்பகங்களும் கலந்து கொண்டதுடன் ஈழத்து எழுத்தாளர்களுக்கான தனி அரங்கு காட்சிப்படுத்தப்பட்டது. இவ் அரங்கில் ஈழத்து எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் தமது நூல்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையும் செய்தனர்.
இந்நிகழ்வில் தமிழகத்தில் இருந்து பேச்சாளர், கதை சொல்லி பவா செல்லத்துரை, தமிழ்ப்பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் பெருமாள் முருகன், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய தமிழ்ப் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம், தமிழக ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி மற்றும் இலங்கையிலுள்ள கல்வியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இப்புத்தக கண்காட்சியில் தமிழகப் பதிப்பகங்களான பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, டிஸ்கவரி, எதிர், நன்னூல், சிக் சென்த் பதிப்பகங்கள் உட்பட தஞ்ஞாவூர் பல்கலைக்கழகமும், லண்டன் சமூகம் இயல் பதிப்பகமும் இலங்கையிலுள்ள முன்னணிப் பதிப்பகங்களும், புத்தக நிலையங்களின் விற்பனைக் கூடங்களும் இடம்பெற்றதுடன், தமிழ், ஆங்கில சிறுவர் பதிப்பகங்களும் கலந்து கொண்டன. புத்தக கண்காட்சி அரங்குக்கு மலையக மாணவ சமுதாயத்தினை உருவாக்க பங்களித்த வி.ரி.தர்மலிங்கத்தின் பெயர் வகுக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை நூலகங்களுக்கும், உள்ளூராட்சி நூலகங்களுக்கும் இலவசமாக புத்தகங்களை வழங்குவதுடன், வாசிப்பு தொடர்பான பல ஊக்கச் செயற்பாடுகளையும் இச்செயற்திட்ட நிகழ்வு அறிமுகம் செய்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇