உலக சுகாதார ஸ்தாபனமானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் ஒரு வாரத்தினை தேர்ந்தெடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஒழிக்கும் வாரமாக பிரகடனப்படுத்துவது வழமை.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக அழகு சாதனப் பொருட்களாக பயன்படுத்தப்படும் கிறீம் வகையினை உடலுக்கு தீங்குவிளைவிக்கும் பொருளாக பிரகடனப்படுத்தியுள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிரிவிற்குள் அழகுசாதனப் பொருட்களாக பயன்படுத்தப்படும் கிறீம் வகைகள் உள்ளடங்கப்படுவது தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையான செயற்பாடுகளை இலங்கை சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
அதன் பிரகாரம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி இளையதம்பி உதயகுமார் தலைமையில் விழிப்புணர்வு செயலமர்வொன்று மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு செயலமர்வு மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் வைத்தியர் தனுஜா வாலேந்திரன், குறித்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களான வைத்தியர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர்கள் உள்ளட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.
இதன்போது சருமத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்களான கிறீம் வகைகளினால் ஏற்படும் பாதகத் தன்மைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன், அவற்றினை தவிர்த்து இயற்கை முறையில் சருமத்தினை பேணுவது எப்படி என்பது தொடர்பான விளக்கங்களும் இதன்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த செயலமர்வில் மட்/ வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










