இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற ICN India – Goa Natural Bodybuilding Championship சர்வதேச உடற்கட்டழகுப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜிஜானந்த், ஆறு பிரிவுகளில் பங்கேற்று ஆறு வெற்றிப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்படி, Men’s Classic பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், Men’s Bodybuilding பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார். மேலும், இரண்டு பிரிவுகளில் மூன்றாமிடங்களைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும், ஏனைய இரண்டு பிரிவுகளில் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக, ICN India Goa Natural Bodybuilding போட்டியின் Men’s Classic பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜிஜானந்த் நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது தொடர்ச்சியான பயிற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள அவரது சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலிருந்து சர்வதேச மேடைக்கு உயர்ந்து தனது திறமையை வெளிப்படுத்திய ஜிஜானந்தின் இந்த வெற்றி, கிழக்கு மாகாணத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








