மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் 02 மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கை (09.02.2024) அன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நலன்புரி சங்கத்தின் லண்டன் கிளை அங்கத்தவர்களின் 38 மில்லியன் ரூபா நிதி அனுசரணையுடன் மகப்பேற்று விடுதிகள் புனரமைக்கப்பட்டன. புனரமைக்கப்பட்ட விடுதிகளை மக்கள்மயப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி , மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், மன்னார் நலன்புரி சங்க லண்டன் கிளையின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் மற்றும் அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
மகப்பேற்று விடுதிகளை திறந்து வைத்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளையும், தாய்மார்களையும், சிசுக்களையும் பார்வையிட்டார். அத்துடன் விடுதிகளில் புனரமைக்கப்பட்ட பகுதிகளையும் கௌரவ ஆளுநர் பார்வையிட்டார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருத்துவ துறையினர் நாட்டிலிருந்து வெளியேறுவது பாரிய சவாலாக அமைந்துள்ளதென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இரு வைத்தியசாலைகளுக்குமான கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் தொடந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை, கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணத்தில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடி விசேட நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இருவேறு கட்டங்களாக அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார். இந்நிலையில் 05 வருட விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதி கோரி நாளாந்தம் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் தனக்கு கிடைக்கப்படுவதாகவும் , புத்திஜீவிகளின் வெளியேற்றம் பாரிய சவாலாக மாறியுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் புலம்பெயர் உறவுகள் இற்றைவரை தாய் மண் மீது அதீத அக்கறைக் கொண்டவர்களாக செயற்படுவதாகவும், அவர்களின் செயற்பாடுகள் உணர்வுரீதியாக அமைந்துள்ளதாகவும் கௌரவ ஆளுநர் கூறினார். புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களின் ஒத்துழைப்புகள் தற்போது அவசியம் எனவும், இவர்களின் முதலீடுகளையும், சமூக நலன்புரி செயற்பாடுகளையும் மேலும் எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇