புதுடில்லி, டொக்டர் சியாமா பிரசாத் முக்கேர்ஜி நீச்சல் தடாக விளையாட்டுத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற அங்குரார்ப்பண பிம்ஸ்டெக் (BIMSTEC) நீர்நிலை விளையாட்டுப் போட்டியில் இலங்கை 3ஆம் இடத்தைப் பெற்றது.
நீச்சல், டைவிங், வோட்டர் போலோ ஆகிய 3 வகையான நீர்நிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுடன் இலங்கையிலிருந்து 75 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
அப் போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் 13 வெண்கலப் பதக்கங்களையும் வென்றெடுத்த இலங்கை பதக்கங்கள் நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்றது. நீச்சல் போட்டிகளில் 9 பதக்கங்களும் டைவிங் மற்றும் வோட்டர் போலோவில் தலா 2 பதக்களும் இலங்கைக்கு கிடைத்தன.
இந்தியா 19 தங்கப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சம்பியனானதுடன் தாய்லாந்து 2ஆம் இடத்தைப் பெற்றது.
இப் போட்டியில் பங்குபற்றிய 75 இலங்கையர்களில் பிஷப் கல்லூரியைச் சேர்ந்த கித்மி மாரம்பே மாத்திரமே வெள்ளிப் பதக்கத்தை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார்.
பெண்களுக்கான 1 மீற்றர் ஸ்ப்ரிங் போர்ட் டைவிங் போட்டியில் 215.15 புள்ளிகளைப் பெற்று கித்மி 2ஆம் இடத்தைப் பெற்றார்.
பெண்களுக்கான 3 மீற்றர் ஸ்ப்ரிங் போர்ட் டைவிங் போட்டியில் விசாக்கா மாணவி வினுதி கன்கானம்கே 176.15 புள்ளிகளுடன் வென்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
நீச்சல் போட்டிகள்
கடந்த வாரம் நடைபெற்ற நீர்நிலை விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்றுகொடுத்த பெருமை ஏஷியன் இன்டர்நெஷனல் ஸ்கூல் வீராங்கனை கிறிஸ்டினா பெருமாள் என்பவரை சாரும்.
பெண்களுக்கான 200 மீற்றர் மார்தட்டு வகை நீச்சல் போட்டியை 2 நிமிடங்கள், 52.68 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
விசாக்கா வித்தியாலய மாணவி டினாலி கருணாதாச தனி நபருக்கான 2 பதக்கங்களை வென்றெடுத்தார். அவர் ஒருவரே இலங்கை சார்பாக 2 பதக்கங்களை வென்றவர் ஆவார்.
பெண்களுக்கான 200 மீற்றர் தனிநபர் கலவை நீச்சல் போட்டியிலும் (2:42.17), 400 மீற்றர் தனிநபர் கலவை நீச்சல் போட்டியிலும் (5:47.58) வெண்கலப் பதக்கங்களை டினாலி வென்றெடுத்தார்.
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 200 மீற்றர் தனிநபர் கலவை நீச்சல் போட்டியில் சென். பிறிஜெட்ஸ் கன்னியாஸ்திரிகள் மடம் மாணவி அமாயா டியானா ரசூல் (2 நி. 43.61 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
பெண்களுக்கான 200 மீற்றர் மல்லாக்கு நீச்சல் போட்டியில் ஏஷியன் இன்டர்நெஷனல் ஸ்கூல் மாணவி சிதுக்கி யோனாரா (2:19.86) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதனைவிட 4 X 100 மீற்றர் சாதாரண தொடர் நீச்சிலில் இருபாலாரிலும் இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
ஆண்கள் அணியில் மஞ்சுள கமகே, கவீஷ கிம்ஹான் (இருவரும் ஆனந்த), பினுர தலகல (நுகேகொடை லைசியம்), கிறிஸ் பவித்ர (சென் பீட்டர்ஸ்) ஆகியோரும் பெண்கள் அணியில் டினாலி கருணாதாச (விசாக்கா), தெவிந்தீ மெத்லினி (வத்தளை லைசியம்), சனுதி குமாரபெரும (நுகேகொடை லைசியம்), ஜெசி செனவிரத்ன (திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம்) ஆகியோரும் இடம்பெற்றனர்.
கலப்பின பிரிவு 4 X 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் மஞ்சுள கமகே (ஆனந்த), ஜெசி செனவிரத்ன (திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம்), தெவிந்தீ மெத்லினி (வத்தளை லைசியம்), கிறிஸ் பவித்ர (சென் பீட்டர்ஸ்) ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் கலவை நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் பினுர தலகல (நுகேகொடை லைசியம்), எம்.எவ். முஹம்மத் (ஸாஹிரா), நிக்கிலேஸ்வரன் குமரகுரு (ஏஷியன் இன்டர்நெஷனல்), மனுஜ கமகே (ஆனந்த) ஆகியோர் இடம்பெற்றனர்.
பெண்களுக்கான 4 X 400 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் சிதுக்கி யொனாரா, கிறிஸ்டினா பெருமாள் (இருவரும் ஏஷியன் இன்டர்நெஷனல்), அமாயா டியானா ரசூல் (சென் பிறிஜெட்ஸ்), டினாலி கருணாதாச (விசாக்கா) ஆகியோர் இடம்பெற்றனர்.
வோட்டர் போலோ போட்டியில் இருபாலாரிலும் இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
தெற்காசியாவிலிருந்து பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய 5 நாடுகளும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து மியன்மார், தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் இப் போட்டிகளில் பங்குபற்றின.
இந்த ஏழு நாடுகளும் பல்துறைசார் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) குழுவில் அங்கம் வகிப்பதால் இந்த விளையாட்டுப் போட்டி பிம்ஸ்டெக் சம்பியன்ஷிப் என அழைக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇