இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் விவசாய தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளிலும் விவசாயத் துறையின் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டுடன் இணைந்து விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாமின் விவசாய மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் Minh Hoan Le ஆகியோருக்கு இடையே 21.02.2024 அன்று இருதரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளனர்.
விவசாய தொழில்நுட்பம், ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி, அனுபவப் பரிமாற்றம், மேம்பட்ட விதை உற்பத்தி, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து அதிக விளைச்சல் பெறுவது போன்ற பல விடயங்களில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளமை குறித்து வியட்நாம் விவசாய அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடினமான பொருளாதார காலகட்டத்தை அனுபவித்தாலும் உணவு உற்பத்தியில் இலங்கையின் ஆற்றலை பாராட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார வீழ்ச்சியினால் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பலர் கருதினாலும், அரசாங்கம் மற்றும் விவசாயிகளின் இடையூறுகளுக்கு மத்தியில் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் இலங்கை மக்களுக்கு உணவு நெருக்கடி ஏற்படவில்லை எனவும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார். இலங்கை விவசாயிகளுக்கு மக்கள் தமது நன்றியை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇