அம்மா வீடு எனும் பெயரில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்று மட்டக்களப்பில் 27-02-2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான LIFT நிறுவனத்தின் “நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரித்தல்” எனும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந் நிலையத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு இவ் வேலைத்திட்டத்திற்கு நிதியை வழங்கிய மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகளாக திரு. திருமதி சிரஞ்சீவி தம்பதியினர் கௌரவ அதிதிகளாக வருகை தந்திருந்ததோடு சிறப்பு விருந்தினர்களாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. பாரதி கென்னடி, கிழக்குப் பல்கலைக்கழக குடும்பநல வைத்தியத்துறை பேராசிரியர், வைத்தியர் க. அருளானந்தம், மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் M.M.H. நயிமுதீன், LIFT நிறுவன பணிப்பாளர் சபை அங்கத்தவர் திரு. ந.கணேசானந்தம் மற்றும் அம்கோர் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு. யோ.சிவயோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறந்து வைக்கப்பட்ட இக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் மூலமாக வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை பல பெண்களுக்கு இந்நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறான ஓர் நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவும் தேவையானது எனவும், அதனை சிறந்த முறையில் உருவாக்கியுள்ள LIFT நிறுவனத்தினைப் பாராட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிலையத்தில் 3 மாதக் குழந்தைகைக் கூட பராமரிக்கும் வசதி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையத்தின் உருவாக்கத்தில் தனித்து நின்று அத்தனை வேலைகளையும் செய்து முடித்த திரு. பிறிஸ்லி றோய் இற்கு LIFT நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளரினால் மலர்மாலை அணிவித்து, பாராட்டு பாமாஸை வாசித்து கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிலையத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 முதல் மாலை 5:30 மணிவரை பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.