மின் விளக்குகள் மேலதிக அலங்கார பொருத்துகள் பொருத்தப்பட்டு விரிவாக மாற்றியமைக்கப்பட்ட பல பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்களின் முறைப்பாடுகளை அடுத்து பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பேருந்துகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சில பேருந்துகள் அஜாக்கிரதையாக செலுத்தப்படும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அவர் கூறினார்.
அதன் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் உதவியாளர்களை அடையாளம் காண 54 பஸ்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், கைப்பற்றப்பட்ட பஸ்களின் உரிமையாளர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.