இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் 17.10.2023 அன்று பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோமாகம மற்றும் கொலன்னாவ ஆகிய இரண்டு உள்ளூராட்சி சபைகளும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் துரிதமாக நகரமயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே இங்கு மேலும் தெரிவித்தார். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களும் வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 276 உள்ளூராட்சி சபைகளில் உள்ள 12,773 கிராம அலுவலர் பிரிவுகளில் 3,025 நகர்ப்புறங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது 23.68% ஆகும். இந்த கணக்கெடுப்பின்படி, அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதத்தைக் கொண்ட மாவட்டம் கொழும்பு ஆகும். இதன் சதவீதம் 96.74%. கம்பஹா மாவட்டம் 76.76% வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.28% வீதத்தையும் காட்டுகிறது. நகர்ப்புற சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2.84% ஆகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇