தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறுகின்றது.
தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு முன்னதாக அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்களை தயாரித்த பின்னர், குறித்த பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் இடம்பெறும் என மேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதேவேளை, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் ஊடாக, பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து விலகிச் செல்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇