மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் குருமண்வெளி கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று (03) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் குருமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
‘எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்’ என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்களினால் பல கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டத்துடன், சிறுவர் மற்றும் முதியோருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் கல்வி, கலை, மற்றும் விளையாட்டு எனும் பிரிவுகளில் தேசிய ரீதியில் தமது திறமைகளை வெளிக்காட்டும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், பிரதேச மட்டத்தில் சிறந்த இயங்குநிலையிலான கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு, சிறுவர் கழகச் செயற்பாடு, பாடசாலை மட்ட சிறுவர் பாதுகாப்பு குழு முதலான குழுக்களுக்கும் குறித்த காலத்தில் அதிகளவாக நூலகங்களை பயன்படுத்திய மாணவர் மற்றும் விசேட திறமையால் சாதனையாளர் என தெரிவு செய்யப்பட்டு பாராட்டி பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர், கல்வி மற்றும் சுகாதார திணைக்கள பிரதிநிதிகள், குருமண்வெளி பிரதேச பாடசாலை அதிபர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள், சிக்கன கடனுதவி சங்கத்தினர், முதியோர் சங்கங்கள் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள், குருமண்வெளி பொது நூலகர், மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.