குழந்தைகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்ற இவ்விரு நோக்கங்களுக்காக சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்ற குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளே சர்வதேச குழந்தைகளின் புத்தக தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் திகதி சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்களுக்கான புத்தகங்களுக்கான ஜப்பான் வாரியம் (JBBY) ICBD 2024 இன் அதிகாரப்பூர்வ அனுசரணையாளராக செயற்படுகின்றது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “உங்கள் கற்பனையின் சிறகில் கடல்களைக் கடக்கவும்” என்பதாகும்.
சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை கொண்டாடுவதற்கு முன் முயற்சி செய்யும் வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும். இந்த வாரியத்தில் உள்ள நாடுகளுக்கு அது பிரித்தளிக்கப்படும். அந்த குறிப்பிட்ட நாடு அந்த ஆண்டு கொண்டாட்ட கருத்தை முடிவு செய்து, தன் நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலக குழந்தைகளுக்கு அந்தாண்டின் செய்தியை வழங்கும். மேலும் புகழ்பெற்ற ஓவியர்களை வைத்து அந்த ஆண்டிற்கான சுவரொட்டியை வடிவமைத்து, அந்த சுவரொட்டி மூலம் புத்தகங்கள் படித்தல் மற்றும் சிறார் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அவற்றை ஆங்காங்கே காட்சிப்படுத்தும்.
ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பாடசாலைகள், பொது நூலகங்கள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குழந்தைகளின் புத்தங்களை கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல், இலக்கிய படைப்புப் போட்டி, புத்தகங்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகள் உலகம் என்றுமே தனித்துவம் வாய்ந்தது. அதை உணர்வதற்கு நாம் குழந்தைகளாகத்தான் வேண்டும். அது சாத்தியமில்லாதபட்சத்தில் அவர்களின் உலகத்தில் சஞ்சரிப்பது அவர்கள் மட்டுமே பெற்ற வரம். குழந்தைகள் திடீரென அறிவாளிகளாக பேசுவார்கள். திடீரென குழந்தையாக மாறிவிடுவார்கள். குழந்தை பருவம் ஒரு சுகமான பருவம். குழந்தையாக இருக்கும்போது எப்போது வளர்வோம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். வளர்ந்தபின் குழந்தையாகிவிடலாமா என்று தோன்றும். இதனால் குழந்தை பருவ சுவாரஸ்யங்களை நாம் குழந்தைகளாக மகிழ்ச்சியுடன் அனுபவித்திருக்க மாட்டோம்.
குழந்தைகளின் புன்னகை, அவர்கள் தரும் தன்னம்பிக்கை, அவர்கள் கற்றுத்தரும் பாடங்கள் என அனைத்துமே அலாதி இன்பம் தருவது. அந்த குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம். அவர்களுக்கு நம் சமூகத்தில் பாதுகாப்பு உள்ளதா? வெளி நாடுகளில் எல்லாம் குழந்தைகளின் உரிமைகள் கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அது ஓரளவு மட்டுமே சாத்தியமாகிறது.
குழந்தைகளுக்கென்று தனியாக அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பது பெரியவர்களின் கடமை. அந்த வகையில் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு நல்ல புத்தகங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அது நம் கடமையும் ஆகும். நல்ல சிறார் இலக்கியங்களை தேர்ந்தெடுத்து அவர்களை படிக்க வைக்க இந்த குழந்தைகளின் புத்தக தினத்தில் உறுதியேற்போம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇