தேசிய “உருமய” காணி உறுதி அளிப்பு வேலைத்திட்டம் குறித்து கிழக்கு மாகாண மக்களுக்கு விழிப்பூட்டும் விதமாக கிழக்கு மாகாணத்தின் அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு 30.04.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அரச காணிகளின் சகல உரிமைகளையும் பெற்ற மக்களுக்கு நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் “உருமய” காணி உறுதி அளிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டத்தின் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாகாணக் காணி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுவர்ணபூமி, இசுறு பூமி, ஜய பூமி, ரண் பூமி போன்ற அரச காணி அளிப்புக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை பிரதேச காணி அலுவலகங்களில் ஒப்படைத்து, இவ்வுருமய காணி அளிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களை ஆர்வமூட்டுவதற்கான வழிகாட்டல்களை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சந்திரா ஹேரத் வழங்கினார்.
இத்தெளிவுபடுத்தல் நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சகல பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், காணி அலுவலர்கள், காணிப் பதிவாளர் அலுவலகம், ஆணி ஆணி ஆளர் அலுவலகம் நில அளவையாளர் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றினதும், காணி தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர் நுவணி, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாகாண காணி அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇