உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
நோக்கம்
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும் ,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் – நில மீட்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தடுப்பு ஆகியவை ஆகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇