உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் இப்பிரதேசத்திற்கான சுற்றாடல் சார் நிகழ்சித்திட்டங்களான சிரமதானம், மரநடுகை, விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் விசேட செயற்றிட்டங்கள் இவ்வாரம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில் 05.06.2024 அன்று காத்தான்குடி கடற்கரைப் பகுதியை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் நிகழ்வு அதிகாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கடற்கரையினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
167ஏ, 167பீ, 167சீ ஆகிய கிரம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் கடற்கரைப் பகுதி உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் பலரும் அதிகமாக வருகைதரும் இடங்களாகும். இப்பகுதியில் காணப்படும் பொலித்தீன், கடதாசி, உணவுக் கழிவுகள் வெவ்வேறாக அகற்றப்பட்டதுடன் கடல் அலைகளினால் ஒதுங்கும் கழிவுகளும் முறையாக அகற்றப்பட்டன.
கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மலர்விழியின் ஒருங்கிணைப்பிலும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்ற இச்சிரமதானப் பணியில் மாவட்ட கடல்வள சுற்றுச் சூழல் உத்தியோகத்தர் திருமதி.ஆஸிபா றசூல், 167ஏ கிரம சேவை உத்தியோகத்தர் நசீமா ஜறூப், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இர்பான், 167பீ, 167சீ பிரிவுகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇