இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக அலுவலக தளபாட கொள்வனவுக்காக 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கிவந்த மாவட்ட செயலகத்தின் இடவசதி பற்றாக்குறையின் காரணமாக புதிய மாவட்ட செயலக கட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் திராய்மடு பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் நிர்மாண பணிகள் மிக நீண்ட காலமாக முடிவுறுத்தப்படாமலிருந்த நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் பொறுப்பேற்றதன் பின்னர், பல்வேறு வழிகளிலும் இதற்கான நிதியினை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக, புதிய மாவட்ட செயலகத்தின் பணிகளை முழுமையாக முடிவுறுத்தி இந்த ஆண்டு மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் உருவாகியுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தினை, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அன்று கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.
புதிய மாவட்ட செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முழுமையாக இயங்க செய்து விரைவில் மக்கள் பணிகளை ஆரம்பிக்கும் வண்ணம் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலகத்தில் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும், அவற்றினை மக்கள் பாவனைக்காக விரைவாக வழங்குவதற்கு தேவையான ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், குறித்த கள விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சரினால் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
மேற்படி மாவட்ட செயலக கட்டடமானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ள போதிலும் அலுவலக தளவாட கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடானது மேற்கொள்ளப்படாமையின் காரணமாக குறித்த நேரத்தில் மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள் முன்னெடுப்பதில் தொடர் தாமதநிலை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரால் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த கள விஜயத்தின் போது அலுவலக தளபாட பற்றாக்குறை தொடர்பான விடயமானது மிகப் பிரதான விடயமாக இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
எனவே குறித்த விடயம் தொடர்பில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் நாட்டின் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் புதிய மாவட்ட செயலக தளபாட கொள்வனவுகளுக்காக 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொடுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கட்டட நிர்மாண பணிகள் நடைபெற்று நிறைவுபெறும் நிலையில் உள்ள குறித்த புதிய மாவட்ட செயலக புதிய கட்டடத் தொகுதியில் பாதியளவு நிர்வாக நடவடிக்கைகள் கடந்த 10.06.2024 திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சரின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தனவால் மேற்படி கட்டட தொகுதியானது திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ், பொறியியலாளர் எந்திரி. சுமன் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த. தஜீவரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇