தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் யாழ். மாவட்ட மெய்வல்லுர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய நேசராசா தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.
கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டியிருந்த தேசிய சாதனையையே தக்சிதா முறியடித்தார்.
சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்கிறார்.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் 5.00 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
கடந்த மார்ச் மாதம் இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் 5.17 மீற்றர் உயரம் தாவி தேசிய சாதனை படைத்த புவிதரன், போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் பங்குபற்றியதால் புதிய சாதனைக்கு இலக்கு வைக்க முடியாமல் போனதாக கவலையுடன் தெரிவித்தார்.
ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியல் மாலை 6.30 மணிவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
தக்சிதாவுக்கும் புவிதரனுக்கும் கணாதீபன் பயிற்சி அளித்துவருகிறார்.
இதேவேளை, ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ். மிதுன்ராஜ் 27.06.2024 அன்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தட்டெறிதலில் 45.08 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இது அவரது தனிப்பட்ட அதிசறிந்த தூரப் பெறுதியாகும்.