கறிவேப்பிலை மற்றும் பூண்டை காலையில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…..
ஒவ்வொருவருமே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புவோம். அதற்காக ஆரோக்கியமான பழக்கங்களை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டும் வருகிறோம்.
ஒருவரது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைப் பெற சிறந்த வழி நல்ல சத்துள்ள உணவுப் பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது தான். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 5 கறிவேப்பிலை மற்றும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால் உடலினுள் பல அதிசயங்கள் நிகழும்.
என்ன தான் கறிவேப்பிலையும், பூண்டும் தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான பொருட்களாக இருந்தாலும், அவற்றை நாம் பச்சையாக, அதுவும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட்டு, உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். இப்போது ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் 5 கறிவேப்பிலை, 1 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் என்னென்ன அற்புதங்கள் நிகழும் என்பதைக் காண்போம்.
- தொப்பை குறையும்
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், காலையில் கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை உண்பது நல்ல பலனைத் தரும். அதுவும் ஒரு மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பண்புகள் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகின்றன. அதேப் போல் பூண்டில் இருக்கும் அல்லிசின், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை திறம்பட கரைக்கும் ஆற்றல் கொண்டது.
- இரத்த சர்க்கரை கட்டுப்படும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை மற்றும் பூண்டு உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும். ஆகவே உயர் இரத்த சர்க்கரையைக் கொண்ட சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இவற்றை உட்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.
- இரத்த அழுத்தம் கட்டுப்படும்
பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவக்கூடிய உணவுப் பொருள். இதற்கு பூண்டில் உள்ள அல்லிசின், டயாலில் டைசல்பைட், டயல் ட்ரைசல்பைட் போன்ற சல்பர் கொண்ட கலவைகள் தான் காரணம். அதே போல் கறிவேப்பிலையில் உப்பு குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். குறிப்பாக, இவ்விரு பொருட்களையும் தினமும் உட்கொண்டு வரும் போது, இதய ஆரோக்கியம் மேம்படும்.
- செரிமானம் சிறப்பாக இருக்கும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையையும், பூண்டு பல்லையும் உட்கொள்ளும் போது, செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். ஒருவரது செரிமான மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் தான், அது உடலில் பல பிரச்சனைகளை வரத்தூண்டும். சொல்லப்போனால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய மூல காரணமே செரிமான பிரச்சனைகள் தான். எனவே செரிமான மண்டலம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சாப்பிடுங்கள்.
- நச்சுக்கள் வெளியேறும்
உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கினால், அது உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைக்கும். இந்த ஆரோக்கிய பிரச்சனைகளை தடுத்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், பூண்டு மற்றும் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடியுங்கள்.
- நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால் தான் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுக்களால் அவதிப்படக்கூடும். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை சிரமமின்றி வலுப்படுத்த விரும்பினால், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை காலையில் உட்கொண்டு வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும்.
- கொலஸ்ட்ரால் குறையும்
உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க கறிவேப்பிலை உதவி புரிவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதுவும் கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் உருவாக்கத்தைத் தடுத்து, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க உதவி புரிகிறது.அதேப் போல் ஒரு பல் பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலில் இருந்து 10% கொலஸ்ட்ராலைக் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள் அல்லது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க நினைப்பவர்கள், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பல்லை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். நல்ல பலனைப் பெறலாம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇