சர்வதேச சிறுவர் தினம் இன்று!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

21ஆம் நூற்றாண்டில் அதிமுக்கிய பிரிவினரான சிறுவர்களே எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தையும் சமூகத்தையும் நாட்டையும் கட்டியாளவேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். ஆகையால் அவர்களது சுதந்திரம், உரிமை, கடமை என்பன குடும்பம், பாடசாலை, சமூகம் சார்ந்து பாதுகாப்பானதாகவும் நீதியானதாகவும் அமைவதுடன் நாடளாவிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் சிறுவர்களின் உலகத்தினை பாதுகாப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையில் பொதுவாக 18 வயதுக்கு குறைந்த அனைவரும் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவர்.

சிறுவர்களுக்கான சிறந்த உலகத்தை உருவாக்கும் உரிமைகளை ஊக்குவிக்கவும் கொண்டாடவும் ஒரு வாய்ப்பாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2024 சிறுவர்கள் தினத்தின் தொனிப்பொருள் “பிள்ளைகளைப் பாதுகாப்போம்; சமமாக மதிப்போம் – Protect & Treat every child equality”என்பதாகும்.

ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளுக்கான அங்கீகாரம், கௌரவம், உரிமை என்பவற்றை வழங்கி சமத்துவமாகவும் நீதியாகவும் பாதுகாக்கும் தேசத்தை கட்டியெழுப்புவதே நோக்கமாகும்.

ஒவ்வொரு குழந்தையும் சம உரிமைகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். பல்வேறு நாகரிகங்களின் பின்னணியில் குழந்தைகளிடையே உள்ள பாகுபாடுகளை ஒழிப்பதையும் இது வலியுறுத்துகிறது. ஒவ்வொரு பிள்ளைகளினதும் பிறப்பு முதல் அவர்களது அங்கீகாரமும் கௌரவமும் தனித்துவமும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் சுயநலமற்றதும் நன்னடத்தையும் சுய ஒழுக்கம் மிக்கதுமான உலகத்தை உருவாக்குவதே வளமான எதிர்காலத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய சமூக மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.

இனம், மொழி, சமூக அந்தஸ்து, பரம்பரை ரீதியான பாரபட்சமும் சமூகத்தின் நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிப்பதால் அது சிறுவர்களை உடல், உள, சமூக ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.

வறுமை, உலகலாவிய பார்வையில் உள்ளக மற்றும் வெளியக மோதல்கள், போர்கள், இயற்கைப் பேரழிவுகள், போதைவஸ்து, பாரிய தொற்றுநோய்கள், சமூக வலைத்தளங்களின் மோகம், முறையற்ற தொழில்நுட்ப பாவனை, ஒப்பார் குழு, சமூக வன்முறைகள், இளவயது திருமணம் முதலிய காரணங்களால் சிறுவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் அதிகரித்துவிட்டன.

உலகலாவிய புள்ளிவிபரவியல் கணக்கெடுப்பின் படி, சமூக வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படும் பிரிவினர்களாக சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், யுனிசெப் 2021 அறிக்கையின்படி, சிறுவர்களில் 63 மில்லியன் பெண்பிள்ளைகளும், 97 மில்லியன் ஆண்பிள்ளைகளும் என 160 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை இடைவிட்டு சுதந்திரம், உரிமை மறுக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

எந்தவொரு மனித செயற்பாடுகளும் இயற்கை பேரழிவுகளின் ஈர்ப்பும் சிறுவர்களை பாதிக்கக்கூடாது. ஒரு வளமான சமூகம் அதன் குடிமகன்களின் பிரகாசமான எதிர்காலத்தைப் பொறுத்தது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பருவத்தினருக்கு சம உரிமைகள் மற்றும் சமத்துவம் வேண்டி போராடும் பல அமைப்புக்கள், நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் இயங்கி வருகின்றன. அந்த வகையில் உலக ஐ.நா. சபையின் கீழ் யுனிசெப் (UNICEF), யுனஸ்கோ (UNESCO), சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச நாணய நிதியம், சமூக தொண்டார்வ அமைப்புக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

மேலும் நாட்டுக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள், சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை, Save the children>Amnesty International, மனித உரிமைகள் கண்காணிப்பகம், Care International, தேசிய சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உள்ளன.

இச் சிறப்பு நாளின்போது, சிறுவர்களின் எதிர்காலத்தை உருவாக்குபவர்களின் நல்வாழ்வுக்காக பெற்றோர்களும் ஆசிரியர்களும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடல், உள, சமூகச் செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் ஒழுக்கத்தை கற்பிக்கவும் மேம்படுத்தவும் வேண்டும். பாலியல் கல்வி, பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கலை, தீயணைப்பு, வீதி நடைமுறையறிவு, அனர்த்த முகாமைத்துவக் கல்வி, செயற்பாட்டுக் கல்வி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கக் கல்வி, போசாக்குக் கல்வி ஆகியவற்றை வலியுறுத்த வேண்டும்.

சிறுவர்களின் கற்றலிலும் நல்வாழ்விலும் பெற்றோரின் நேர்மறையான பங்களிப்பு அவர்களின் சந்ததியினரின் மேம்பட்ட திறன்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு, சந்ததியினரின் ஒட்டுமொத்த செயற்றிறனை வெளிப்படையாக பாதிக்கிறது. இது குழந்தைகளின் வலுவான வளர்ச்சிக்கும் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தையின் எண்ணங்களைப் பாராட்டவும், ஒரு நண்பராக உணர்வுகளைப் பரிமாறும் வகையில் பிரச்சினைகளையும் கண்டறிய வேண்டும். இந்த அணுகுமுறையானது ஒவ்வொரு பிள்ளைகளையும் நிதானமாக சிந்திக்க வைக்கிறது.

ஆகவே ஒவ்வொருவரும் ஓர் ஆசானாக, வழிகாட்டியாக, நண்பராக, சிறுவர்களை அணுகி இருவழித் தொடர்பாடலினூடாக அவர்களை வழிநடத்தவும் பாதுகாக்கவும் மதிக்கவும் முனைந்தால் மாத்திரமே எதிர்காலத்தில் வளமான சமூகத்தையும் சிறப்பான நன்மதிப்புள்ள ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவது சாத்தியமாகும் என்பதில் எத்தகைய ஜாயமுமில்லை.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects