உலகளாவிய ரீதியில் மருத்துவம், பௌதிகவியல், இராசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோ RNA – களின் ஒழுங்குமுறையால் புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முயலும் முயற்சியாக `மைக்ரோ RNA’ தொடர்பில் ஆராயச்சியில் ஈடுபட்ட இவர்கள், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மைக்ரோ RNA தொடர்பில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர் .
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கிய கட்டமைப்பான artificial neural networks என்று சொல்லப்படும் (செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள்) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரசாயனவியலுக்கான நோபல் பரிசு
புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்கள்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர், ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. “வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக” இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு
2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை அந்த அமைப்பு மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇