பதுளை – செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து பசறை 13ஆம் கட்டை பகுதியில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
பசறை 13ஆம் கட்டை பகுதியில் 18.11.2024 அன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணியாளர்களும் இணைந்து குறித்த மண்சரிவினை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டுள்ள பதுளை – பசறை பிபில பிரதான வீதியின் ஒரு வழியினை விரைவில் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு 18.11.2024 அன்று கள விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வீதி வாகனங்கள் பயணிப்பதற்கு ஏற்புடையதாக இல்லை.
முடியுமானவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மண்சரிவை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகிறது.
எனவே, அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று விரைவில் வீதியைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் 25 ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளமையால் குறித்த வீதியை பயன்படுத்தும் மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇