புகழ் பெறா வீரர்களாக சேவையாற்றுபவர்களே மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் என மட்டக்களப்பில் இடம் பெற்ற நீதியமைச்சும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு 23.12.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற போது மாவட்ட செயலாளரும் அரசங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தனது பிரதம அதிதி உரையின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் மத்தியஸ்தர் சபையின் மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆசாத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஐஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
இதன் போது உதவி மாவட்ட அரசாங்க அதிபரினால் தலைமையுரை ஆற்றப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆசாத்தினால் மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட செயலாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மத்தியஸ்த சபைகளில் திறம்பட மற்றும் அதிக காலம் சேவையாற்றிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கும், தேசிய மத்தியஸ்த தின நிகழ்வினை முன்னிட்டு மாவட்ட மட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக இடம் பெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இதன் போது பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காணி மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் குருநாதன், மத்தியஸ்தர் சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய ரீதியில் 8400 மத்தியஸ்தர்கள் தேசிய ஆணைக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதுடன், 63 வீதமான பிணக்குகளுக்கு மாவட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டுள்ளதுடன், பல இனங்கள் வாழுகின்ற நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை முன்னிறுத்தி செயற்படும் ஒரு செயற்பாட்டினையே மத்தியஸ்த ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇