யாழ் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் 2024ஆம் ஆண்டு தரம் – 5 மாணவர்களின் ‘சிறகடிக்கும் சிட்டுக்கள் – 2024’ பாராட்டுதலும், பரிசில் வழங்குதலும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் பெற்றோரான பா.ரஜனிகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா சிறப்பு விருந்தினராகவும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கௌரவ விருந்தினராகவும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் ,அவரது பாரியாருமான திருமதி பிரதீபா வேதநாயகனும் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர்,
இப் பாடசாலைக்கு உதவி அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் ஒரு தடவை வந்திருக்கின்றேன். யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் 2019ஆம் ஆண்டு இந்தப் பாடசாலையின் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கியிருந்தேன். அந்த நிதியில் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது. வேறு சில பாடசாலைகளுக்கும் இவ்வாறு நிதி ஒதுக்கியபோதும், என்னைத் தொடர்ந்து பதவிக்கு வந்த மாவட்டச் செயலர் அந்த நிதிகளை அரசியல் காரணங்களுக்காக திருப்பி அனுப்பியிருந்தார். அந்தப் பாடசாலைகளின் கட்டடங்கள் அரைகுறையாகவே உள்ளன.
சிறந்த தலைமைத்துவம் கிடைக்கும்போது பாடசாலைகளும் வளர்ச்சியடையும். உங்களின் பாடசாலைக்கு தரம் – 1 இற்கு அனுமதிகோரி கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களே அதற்குச் சான்று. பாடசாலையின் அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா சிறப்பான தலைமைத்துவத்தை துணிந்து வழங்குகின்றார். அவருக்கு ஆசிரியர்குழாம் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதனால் இந்தச் சிறப்பான நிலைமையை நோக்கி பாடசாலை பயணிக்கின்றது.
மாணவர்களுக்கு இரக்கம், ஏனையோருக்கு உதவுதல், மற்றையவர்கள் மதித்தல் ஆகிய பண்புகளை ஆசிரியர்கள் கட்டாயம் போதிக்கவேண்டும். மாணவர்கள் கடவுள் சிந்தனை உள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும். எதிர்கால சிற்பிகளான அவர்களுக்கு தலைமைத்துவப் பண்பும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இளமையில் பயில்வதே என்றும் அவர்கள் மனதிலிருக்கும். உண்மையில் எமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் மாணவர்களுக்கு இப்போதே பழக்கவேண்டும். அதைச் செய்வது ஆசிரியர்களின் கடமை, என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










