“பேய்களின் தாய்” என்றழைக்கப்பட்ட ‘எக்கிட்னா’!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பண்டைய கிரேக்கர்களால், “பேய்களின் தாய்” (Mother of Evil) என்றழைக்கப்பட்ட எக்கிட்னா, பூமியிலுள்ள முட்டையிடும் பாலூட்டிகளில் ஒன்றாகும்.

அவுஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் வரிசையில், முள்ளம்பன்றி போன்ற உடலமைப்பும் எறும்புத்தின்னி போன்ற உணவுப்பழக்கமும் இணைந்த உயிரினமான இது, ஆச்சரியம் மிக்க ஒரு பிராணியாகும்.

‘மோனோட்ரீம்ஸ்’ எனப்படும் முட்டையிடும் பாலூட்டி வகையில் உலகில் இருந்த ஐந்து பிரிவுகளில் இரண்டு அழிந்துபோய்விட, இப்போது இருப்பவை மூன்று பிரிவுகள்தாம். ஒன்று பிளாட்டிபஸ். மற்ற இரண்டு எக்கிட்னாவின் இரண்டு பிரிவுகள்.

பூமியின் தொன்மையான உயிரின வகையைச் சார்ந்த எக்கிட்னா, சுமார் 110 மில்லியன் (11 கோடி) வருடங்களுக்கு முன்பு டைனோசர் காலத்தில் வாழ்ந்த பிளாட்டிபஸ் போன்ற ஒரு உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பிரிந்தது என, புதையெலும்புப் படிமங்கள் தெரிவிக்கின்றன.

பிளாட்டிபஸ்ஸைப் போலவே முட்டையிட்டுக் குட்டிக்குப் பால் கொடுத்தாலும், எக்கிட்னாக்கள் மார்சுபியல் இனத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்கு, நிரந்தரமான வயிற்றுப்பை கிடையாது. முட்டையிடும் சமயத்தில் தசைமடிப்புகளை விரித்தும் சுருக்கியும் தற்காலிகமாய் பை போன்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டுவிடும்.

பிளாட்டிபஸ்களைப் போலவே இவற்றின் அலகிலும் மின் உணர்விழைகள் இருந்தாலும் எண்ணிக்கை அளவில் மாறுபடும். பிளாட்டிபஸ்ஸின் அலகில் 40,000 எண்ணிக்கை மின் உணர்விழைகள் என்றால் நீள அலகு எக்கிட்னாவுக்கு இருப்பவை 2,000 தான்.

மின் உணர்விழைகள்தான் உணவு இருக்குமிடத்தை நுகர்திறனாலும் தொடுதிறனாலும் துல்லியமாய் அறிந்துகொள்ள உதவுகின்றன.

குழாய் போன்று மிகக்குறுகிய வாயும் பற்களற்ற தாடையும் கொண்ட எக்கிட்னா, காய்ந்த மரத்துவாரங்கள், எறும்புப்புற்று, கறையான் புற்று போன்றவற்றுள் கிட்டத்தட்ட 18 செ.மீ நீளமான, பசையுள்ள நாக்கை நுழைத்துத் துழாவும்.

இவை, தம் நாக்கில் ஒட்டிக்கொள்ளும் எறும்பு, கறையான், புழு, பூச்சி போன்றவற்றைத் உண்ணும். மேலும், எக்கிட்னா நாக்கை வெளியில் நீட்டி உள்ளிழுக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? ஒரு நிமிடத்துக்கு நூறுமுறையாம்.

இவற்றின், இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் வேடிக்கையான காட்சியொன்றைக் காணலாம். ஒரு பெண் எக்கிட்னாவைக் கவர, தொடர்வண்டி போல வரிசையாகப் பத்துப்பன்னிரண்டு ஆண் எக்கிட்னாக்கள் அது போகுமிடமெல்லாம் பின்தொடரும் காட்சிதான் அது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது தன் ஆளுமையையும் உடல் வலிமையையும் நிரூபித்து வெற்றி காணும் ஆண் எக்கிட்னா, பெண் எக்கிட்னாவுடன் இணையும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெண் எக்கிட்னா சுண்டைக்காய் அளவில் மெல்லிய தோல்முட்டை ஒன்றை இட்டு தன் வயிற்றுப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொள்ளும். பத்துநாட்களுக்குப் பிறகு முட்டையைக் கிழித்துக்கொண்டு சுமார் ஒரு செ.மீ. அளவே உள்ள குட்டி எக்கிட்னா வெளிவரும்.

முட்டைக்குள்ளிருக்கும் குட்டி எக்கிட்னாவுக்கு முட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேற உதவுவதற்கென்றே ஒரு பல் வளரும். எக்கிட்னாவின் வாழ்க்கையில் அதற்கு வளரும் ஒரே ஒரு பல் அதுதான். அதுவும் முட்டையிலிருந்து வெளிவந்த மறுநாளே விழுந்துவிடும். குட்டி பிறக்கும்போது முட்களோ, ரோமங்களோ அற்று வழுவழுப்பான உடலோடு பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects