கல்விச் சேவையில் 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையின் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் 29.09.2023 அன்று முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.
சிவப்பு மற்றும் நீலநிறப் பின்னணியில் கல்லூரியின் தனித்துவமான அழகிய முகப்புத் தோற்றத்தையும், கல்லூரியின் இலச்சினையையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட இந்த ஞாபகார்த்த முத்திரை இலங்கை ரூபா. 25.00 பெறுமதியுடையதாகும்.
1873 ஆம் ஆண்டில் இயேசு சபை துறவி வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் இனால் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆண்கள் பாடசாலை 29-09-2023 அன்று தனது 150 ஆவது ஆண்டினைப் பூர்த்தி செய்கின்றது. இதனைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முத்திரை வெளியிடப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இம் முத்திரை வெளியீட்டு விழாவில் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.