கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வார இறுதியில் நடைபெற்ற லீக் 1 (League One) இறுதிப் போட்டியில் பேருவளை கிரேட் ஸ்டார் கழகத்தை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிகொண்ட மாவனெல்லை யுனைட்டட் கழகம், இரண்டு கட்ட இறுதிப் போட்டியில் 4 – 0 என்ற ஓட்டமொத்த கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாம் கட்ட இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் மாவனெல்லை யுனைட்டட் கழகம் வெற்றிபெற்றிருந்தது.
சம்பியனான மாவனெல்லை யுனைட்டட் கழகத்திற்கு 10 இலட்சம் ரூபாவும் கிரேட் ஸ்டார் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபாவும் பணப்பரிசுகளாக வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் மாவனெல்லை யுனைட்டட் கழகத்தின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் கிரேட் ஸ்டார் கழகம் திணறியதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும் அவ்வப்போது மாவனெல்லை யுனைட்டட் கழக கோல் எல்லையை ஆக்கிரமித்த கிரேட் ஸ்டார் கழகம் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த தவறியது.
இதேவேளை, போட்டியின் 23ஆவது நிமிடத்தில் மொஹமத் ஷக்கீல் போட்ட கோல் மாவனெல்லை யுனைட்டட் கழகத்தை முன்னிலையில் இட்டது.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் ஏகப்பட்ட கோல்போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டன.
இடைவேளைக்குப் பின்னர் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்த மாவனெல்லை யுனைட்டட் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.
எனினும், போட்டியின் கடைசிக் கட்டத்தில் கிரேட் ஸ்டார் கழக பின்களத்தில் ஏற்பட்ட தவறுகளைப் பயன்படுத்தி 9 நிமிட இடைவெளியில் மாவனெல்லை யுனைட்டட் கழகம் 2 கோல்களைப் புகுத்தியது.
போட்டியில் 83ஆவது நிமிடத்திலும் 90 + 2ஆவது நிமிடத்திலும் மொஹமத் ஷிபான் 2 கோல்களைப் போட்டு மாவனெல்லை யுனைட்டக் கழகம் சம்பியனாவதை உறுதிசெய்தார்.
இவர் முதலாம் கட்ட இறுதிப் போட்டியிலும் வெற்றி கோலை 41ஆவது நிமிடத்தில் போட்டிருந்தார்.
இந்த சுற்றுப் போட்டி முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடிய மொஹமத் ஷிபான், சிறந்த வீரருக்கான தங்க பாதணியை தனதாக்கிக்கொண்டார்.
அவரது அணியைச் சேர்ந்த கோல்காப்பாளர் ராசிக் ரிஷாத் சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறையை வென்றெடுத்தார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதான பரிசுகளை வழங்கினார்.
மாவனெல்லை யுனைட்டட் கழகத்திற்கு முன்னாள் தேசிய வீரர் எம். ரமீஸ் பயிற்சிகளை வழங்கிவருகிறார்.
பிபா மத்தியஸ்தர் ஜீ. நிவொன் ரொபேஷ் மிகத் திறமையாக மத்தியஸ்தம் வகித்து அணிகளினதும் பார்வையாளர்களினதும் பாராட்டைப் பெற்றார்.
ரொபேஷ் தற்போது வெளிநாடொன்றில் முழுநேர பிரதான மத்தியஸ்தராக கடமையாற்றுகிறார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










