வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த. ஜெயந்தன் தலைமையிலான குழுவினருக்கும் , வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 16.11.2023 அன்று வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர்.வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் இந்த உறுதியை வழங்கினர்.
அந்த வகையில் கௌரவ ஆளுநர்பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கூறினார்.மேலும் மாணவர்கள் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதால் வாழ்கையின் அடுத்த நகர்விற்கு அது இடையூறாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதோடு , இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கௌரவ ஆளுநரின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த வட மாகாண அதிபர்கள் சங்கம், இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அத்துடன் வட மாகாண கல்வி மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் வட மாகாண அதிபர்கள் சங்கத்தினால் மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளிக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇