மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்தின் மேற்பார்வையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (12.02.2026) நடைபெற்றது.
இதன் போது துறைசார் நிபுணர்களினால் தற்கால சூழ்நிலையில் சிறார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் மனவெழுச்சி தொடர்பான விளக்கங்களை வழங்கினர். மேலும் சிறார்கள் மத்தியில் தொலைபேசி பாவனை, தற்கொலைகள் அவற்றுக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டது.
அத்துடன் இள வயது சந்ததியினர் மத்தியில் உளநலத்தினை மேம்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றாக சேர்ந்து செயற்படவேண்டும் என உயர் அதிகாரிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன், உளநல வைத்திய நிபுணர் கமல்ராஜ், உளநல வைத்தியர் டான் சௌந்தராஜா, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வலய கல்வி பணிப்பாளர்கள், துறைசார் நிபுணர்கள், உளவள துணை இணைப்பாளர் சுபாநந்தினி, மாவட்ட உளவளதுணை உதவியாளர் ரீ. நிசாந்தன், பொலிசார், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள், துறைசார் இணைப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மன உளைச்சல் காரணமாக பல நபர்கள் இன்னல்களுக்கு முகங்கொடுப்பதை காணக்கூடியதாக இருப்பதனால் அவர்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










