மீண்டும் மீண்டும் ஏற்படும் அரிதான மூளை கட்டி பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை………..
எம்மில் சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். இதற்காக அவர்கள் முதலில் சுய மருத்துவம் மேற்கொள்வர். இருப்பினும் தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்பட்டு உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாரிய சங்கடத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை பெறும் போது அவர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர். சிலருக்கு மூளையில் சிக்கலான பகுதியில் கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதனை மருத்துவ மொழியில் கிரானியோபார்ஞ்சியோ என குறிப்பிடுவர். இத்தகைய பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பர்.
இவர்களில் சிலருக்கு இத்தகைய பாதிப்பு சத்திர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் ஏற்படக்கூடும். இவர்களுக்கு பிரத்யேக நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்டுள்ள கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கிரானியோபார்ஞ்சியோ எனும் மூளை பகுதியில் ஏற்படும் அரிதான கட்டி பாதிப்பு சிலருக்கு பிறக்கும் போதே ஏற்படுகிறது. மேலும் குழந்தை பருவத்திலும் அல்லது அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். பார்வை திறனில் குறைபாடு, சமச்சீரற்ற ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாடு, சீரற்ற வளர்ச்சி. ஆகிய பாதிப்புகளை அறிகுறிகளாக வெளிப்படுத்தும். சிலருக்கு இவை மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கும்.
மூளையில் ஏற்படும் இத்தகைய கட்டி பாதிப்பை எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் துல்லியமாக அவதானித்து சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். சிலருக்கு இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்பட்டால்.. நவீன தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையை துல்லியமாக செலுத்துவதன் மூலம் முழுமையான நிவாரணத்தை அளிப்பதுடன் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும்.
வைத்தியர் ருனிதா


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










