மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “முழு நாடும் ஒன்றாக” “ரட்டம எகட்ட” விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அனுசிக்கா அபேசிங்கவின் தலைமையில் பிரதான கேட்போர் கூடத்தில் 06.03.2026 அன்று நடைபெற்றது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான தேசிய செயற்திட்டமானது தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸினால் விஷபோதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் விஷ போதைப்பொருள் விற்பனை, விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பயன்பாட்டில் அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் விழிப்புணர்வு போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் போது போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டதுடன் வைத்தியசாலை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்திற்கு வழங்குவதினுடாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
இந் நிகழ்வில் வைத்தியர் லிவிதன், விசேட தர தாதியர் உத்தியோகத்தர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










