நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி , களு மற்றும் நில்வளவை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், கடல் நீர் இந்த ஆறுகளுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.
இது குடிநீர் விநியோகக் கட்டமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தி, குடிநீர் விநியோகத்தைத் தடை செய்யக்கூடும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஈர வலய மற்றும் உலர் வலய ஆறுகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.
பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது 73 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.
தற்போதைய நீர் இருப்பு விவசாய நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், சிறு போகச் செய்கைக்கு நீர் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட வேண்டியுள்ளது.
குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மின்சாரப் பயன்பாட்டையும் இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










