தடம் புரண்டுள்ள ‘சாகரிகா’ புகையிரத்தை மீண்டும் தடமேற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குள் அதன் போக்குவரத்து நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய:
“சேதமடைந்த ரயில் எமக்கு ஒரு பெரிய இழப்பாகும். காரணம் எங்களிடம் புகையிரதங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த இழப்பை நாம் ஈடுகட்ட வேண்டும். அதனை விரைவில் முடிக்க எதிர்பார்க்கிறோம். எனினும், அதற்குப் பதிலாக மற்றொரு புகையிரதத்தை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. அது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.” என்றார்
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா புகையிரதம் , இன்று (24.04.2026) காலை வாத்துவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.
இந்த விபத்தினால் இரட்டை புகையிரதப் பாதைகளில் ஒரு பாதைக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தடம் புரழ்வு காரணமாக முடங்கியுள்ள கரையோர புகையிரதப் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகளை, கொழும்பில் இருந்து பாணந்துறை ரயில் நிலையம் வரை முன்னெடுப்பதற்கு புகையிரதத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மூலம் பயணிகள் களுத்துறை தெற்கு புகையிரத நிலையம் வரை அழைத்துச் செல்லப்படுவர் எனவும், அங்கிருந்து மாத்தறை மற்றும் பெலியத்தை வரை புகையிரதங்கள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்றைய மாலைப் பொழுது முடிவதற்குள் ரயில் பாதையில் உள்ள தடைகளை அகற்றி, ஒரு பாதையையாவது புகையிரத போக்குவரத்திற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புகையிரதத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, புகையிரதப் பாதை தடைப்பட்டுள்ளதால், போக்குவரத்து அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து பேருந்துகள் மூலம் பயணிகளை ஏற்றிச் செல்ல புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய புகையிரதத் திணைக்களத்தினால் புதிய நேர அட்டவணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










