நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், பயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கமைய விவசாயிகள் தங்களது பயிர்ச் சேதங்கள் குறித்த விபரங்களை உரிய அதிகாரிகளுக்கு வழங்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.
“கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் சில விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய, விவசாய காப்புறுதிச் சபை மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாக, சேதமடைந்த அனைத்துப் பயிர்களையும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கைப்படுத்துமாறு நாம் அறிவுறுத்தியுள்ளோம். எமது அதிகாரிகள் தற்போது அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட வயல் நிலங்களின் விவசாயிகளது விபரங்கள் கிடைத்தவுடன், விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக குறுகிய காலத்திற்குள் அந்த விவசாய மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளை நாம் நிறைவு செய்வோம். எனவே, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எமது அதிகாரிகள் ஊடாக அந்த விபரங்களை உடனடியாக எமக்குக் கிடைக்கச் செய்யுமாறு விவசாய மக்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
இந்த இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து, விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்ஹஆரச்சிவிடம் ஊடகங்கள் வினவியபோது,
உரிய விபரங்களின் அடிப்படையில் விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதற்கமைய, கிடைக்கப்பெறும் விபரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் சேதமடைந்த பயிர் நிலங்களைப் பார்வையிடுவார்கள் எனக் குறிப்பிட்ட அவர், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவிற்கு ஏற்ப நட்டஈடு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










