சீனாவில் நடைபெற்ற முதலாவது ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் (U-23) தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கைத் தடகள அணியினர் 14.07.2026 அன்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஆசிய பிராந்தியத்தின் 43 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் பங்கேற்புடன், கடந்த ஜூலை 8 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை சீனாவின் ஓர்டோஸ் (Ordos) நகரில் இப்போட்டித் தொடர் நடைபெற்றது.
அயோமால் அகலங்க லியனகே (வெள்ளிப் பதக்கம்): ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற இவர், புதிய இலங்கை சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
ஜித்மா விஜேதுங்க (வெண்கலப் பதக்கம்): பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
நெத்மிகா மதுஷானி (வெண்கலப் பதக்கம்): பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்கேற்று இலங்கைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கைத் தடகள அணியினர், 14.07.2026 அன்று இரவு 07.00 மணியளவில் சீனாவின் ஷெங்கய் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ விமானச் சேவைக்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை வரவேற்பதற்காக இலங்கை தடகள சங்கத்தின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் வருகை தந்து மலர்மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










