இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக, “யானையுடன் ஒரு நடைபயணம்” என்ற தனித்துவமான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட திட்டம் தொடர்பில் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,
மிகவும் பாதுகாப்பான சூழலில் யானைகளில் ஒன்றுடன் இணைந்து அதன் அருகிலேயே பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ள முடியும்.
யானைகளின் இயற்கையான நடத்தை முறைகளைக் கவனிப்பதற்கும், இலங்கையின் அடையாளமாக விளங்கும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும், யானைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த அனுபவம் வழிவகுக்கும்.
இந்த “யானையுடன் ஒரு நடைபயணம்” அனுபவமானது ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பின்னவல வளாகத்தில் நடைபெறும்.
இதற்கான விசேட நுழைவுச்சீட்டுகளை பின்னவல யானைகள் சரணாலயத்தின் பிரதான நுழைவாயில் நுழைவுச்சீட்டு கருமப்பீடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
யானைகளை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், கல்விசார்ந்த மற்றும் மறக்க முடியாத ஒரு வனவிலங்கு அனுபவத்தை வழங்கும் இந்த புதிய திட்டத்தில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்குத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










