கொழும்பு சாஹிராக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அலிகார் மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப் பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு தெரிவான அணிகளான கொழும்பு சாஹிராக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையில் கடந்த (11) திகதி கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கில் போட்டி இடம் பெற்றது.
இப்போட்டியில் நான்குக்கு ஐந்து என்ற தண்டனை உதை மூலம் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என் பி . லியணகே,லெப்டினன் கேணல் அனாஸ், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஹர்சத சில்வா,ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி பிரதி அதிபர் எம் எம் மொயிதீன், உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ஹஸ்பான் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிகாரிகளினால் மாணவர்களுக்கான நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇