மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆறாம் ஆண்டு முதல் பதின்மூன்றாம் ஆண்டு வரையான நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களினால் ”கலையால் மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சியொன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி அதிபர் ஆர். பாஸ்கரன் தலைமையில் 19 மற்றும் 20-12-2023 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்ற இக்கண்காட்சி கிழக்குப் பல்கலைக்க ழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க. மோகனதாஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் மட்டக்களப்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் பா. மேகவண்ணன், கல்குடா கல்வி வலய நாடகமும் அரங்கியலும் ஆசிரிய ஆலோசகர் திருமதி ப. பிரதீஸ்வரன், பட்டிருப்பு கல்வி வலய நாடகமும் அரங்கியலும் ஆசிரிய ஆலோசகர் திருமதி சுரேஸ் வனிதா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய நாடகமும் அரங்கியலும் வளவாளர் திருமதி ஹே. தில்லைவாசன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி நாடகமும் அரங்கியலும் ஆசிரியர்களான செ. பிரதீபன், தேவ-அலோசியஸ், திருமதி. புனிதவாணி ஆகியோரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியில் நாடகம் மற்றும் அரங்கியல் தொடர்பான பல்வேறு பொருட்கள், கருவிகள், ஆடை-அணிகலன்கள் என்பன காட்சிப்படுத்தப் பட்டிருந்ததோடு மாணவர்களினால் நாடக ஆற்றுகைகளும் நிகழ்த்தப்பட்டன. இக்கண்காட்சியைப் பல்வேறு பாடசாலை மாணவர்கள் வந்து பார்வையிட்டனர்.
இலங்கையின் முதலாவது பாடசாலை எனும் பெருமையைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் எனப் பல துறைகளிலும் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…