ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரவும் இடங்களைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையானது, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) பணிப்பாளர் நாயகத்தின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் 18.09.2026 அன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபர் திரு. மா. சோமசூரியம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் உதயகுமார், SLRC Covenant Board பிரதிநிதி, செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் பொறுப்பாளர் திரு. ராஜ்குமார் உள்ளிட்ட செஞ்சிலுவைச் சங்க
தொண்டர்கள், கல்லூரியின் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி இ. உதயகுமார்,
டெங்கு போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் பரவுவதைத் தடுப்பது மிகவும் முக்கியமான சமூகப் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தொழில்நுட்பக் கல்லூரி முன்னெடுத்திருப்பதைப் பாராட்டியதுடன், இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்தின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்றும் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி,
இச்செயற்பாடு ஒரு மனிதாபிமானப் பணியாகும் எனக் குறிப்பிட்டதுடன், சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் விருப்பத்துடன் இத்தகைய சமூக சேவைகளில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இச்சிரமதானப் பணியின் போது கல்லூரியின் உள்சூழல் மற்றும் கல்லூரியை அண்டிய சுற்றுச்சூழல் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாகக் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் மற்றும் நீர் தேங்கக்கூடிய பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன.
நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பை வழங்கியதோடு மாணவர்களை ஒருங்கிணைத்து இச்செயற்பாட்டில் ஈடுபடுத்துவதில் மாணவர் ஒன்றிய உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
மேலும், இச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான முழுமையான ஆதரவு மற்றும் அனுசரணையை மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கக் கிளையினர் வழங்கியிருந்தனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









