புதிய குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் 1,056 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 04.10.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.
ஒன்றரை வருட கால முறையான பயிற்சியை நிறைவு செய்துள்ள இந்த உத்தியோகத்தர்கள், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர்.
பொதுச் சுகாதாரத் துறையின் முக்கிய பங்காளிகளான குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்களுக்கு சுகாதார சேவைகளை அவர்களுக்கு அருகிலேயே வழங்குவதிலும், தாய் மற்றும் சேய் நலப் பாதுகாப்பிலும் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தடுப்பூசி திட்டங்களையும், சிசு மரண விகிதத்தைக் குறைப்பதிலும் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் வழங்கும் பங்களிப்பு சர்வதேச ரீதியில் முன்னுதாரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மார்ச் மாதம் அரச சேவையில் இணைக்கப்பட்டவர்களுடன் சேர்த்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,071 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை” வேலைத்திட்டத்தின் கீழ், கருத்தரிப்பு முதல் முதுமை வரையிலான காலப்பகுதியில் மக்களுக்கு நெருக்கமான சுகாதார சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான பதவியுயர்வுகள், சம்பளம், பயிற்சி மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்களான சாமிக எச். கமகே, ஹர்ஷனி சிரிநாம உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









