தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சின் அறிவிப்பு!

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அறிவிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சின் செயலாளரால் இன்று (06.10.2026) இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், எரிபொருள் விற்பனை மூலம் நட்டம் ஏற்படுவதாகக் கூறி, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தமது எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன், எரிபொருளைப் பெறுவதற்காக நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பில் ‘அத தெரண’ வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவிடம் வினவிய போது, தற்போதைய சூழ்நிலையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக, குறித்த நிறுவனங்களை குறைந்தபட்ச எரிபொருள் இருப்பைப் பேணுமாறு அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போதைய எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவான எரிபொருளை விநியோகிப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தப் பிரச்சினை தொடர்பில் நாளை (07.10.2026) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக் கலந்துரையாடல் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெற்றோலிய விநியோகத்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects