கனடாவின் ரொறொன்ரோவில் இயங்கி வரும் தமிழிசைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில், “தளிரின் சலங்கையும் சங்கீதமும்” இசை–நடனப் போட்டியின் சீசன் – 2 இறுதி நிகழ்வும், “அரும்புகள் மலரும் ஓசைகள்” எனும் இசை நிகழ்வும் 03.10.2026 அன்று ரொறொன்ரோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றன.
தமிழ் இசை, நடனம், கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வரும் கலைஞர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள், நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைப் பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, சிறந்த ஆளுமை மற்றும் புதுமைப் பெண்களுக்கான 2026ஆம் ஆண்டுக்கான விருது, சிறந்த சமூக கலை–பண்பாட்டுக்கான விருது, தளிர் நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களுக்கான விருது, நடுவர்களுக்கான விருது, நடன ஆசிரியர்களுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
2026ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆளுமை மற்றும் புதுமைப் பெண்களுக்கான விருது இசை ஆசிரியை பராசக்தி வினாயகதேவராசா, கிருபாநிதி ரெட்ணேசுவரன், சித்திராங்கி சுரேசுகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சமூகத்திலும் கலைத்துறையிலும் தமது ஆளுமை, திறமை மற்றும் பங்களிப்பின் மூலம் சிறப்பான பணிகளை முன்னெடுத்து வரும் இவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த சமூக கலை–பண்பாட்டுக்கான விருது பெரியதம்பி கரிச்சந்திரnனுக்கு வழங்கப்பட்டது. தமிழ் கலை மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் சமூகப் பணிகளுக்கும் அவர் ஆற்றிவரும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இம்மதிப்பளிப்பு இடம்பெற்றது.
“தளிரின் சலங்கையும் சங்கீதமும்” நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப் பங்களித்த ராச் கணேசு மற்றும் சங்கர் கிருசுணன் ஆகியோருக்கு தளிர் நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
போட்டியின் பல்வேறு பிரிவுகளில் நடுவர்களாகப் பணியாற்றி, இளம் கலைஞர்களின் திறமைகளை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவித்த இசை மற்றும் மொழித்துறை சார்ந்த நடுவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
இசை ஆசிரியர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த நடுவர்களாக யெயந்தி லிபாகரன், குகனேசுவரி சத்தியமூர்த்தி, தர்சினி கேதீசுவரன், சிவலோகநாயகி கெங்கேசுவரராசா, யெயலக்சுமி ரவீந்திரன், தர்மினி திசியன், கவினாளி ரவீந்தர், சர்மிலா பிரேமகாந்தன் மற்றும் இசைக்கலைஞர் சுதர்சன் கிரூட்டீன் ஆகியோர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்துடன், தமிழ்மொழி சார்ந்த நடுவர்களாக பணியாற்றிய மேரிகியூரி போல், யோசப் இருதயநாதன், ராச்குமார் குணரெட்ணம், விமலாம்பிகை பாலசுந்தரம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இளம் தலைமுறையினரிடையே நடனக் கலையை வளர்த்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டு வரும் நடன ஆசிரியர்களான சகாணா ரெட்ணேசுவரன் மற்றும் Dr. காஞ்சனா சிவலிங்கம் ஆகியோருக்கும் தளிர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
“தளிரின் சலங்கையும் சங்கீதமும்” போட்டியின் இரண்டாவது பருவத்தின் இறுதி நிகழ்வும், “அரும்புகள் மலரும் ஓசைகள்” இசை நிகழ்வும் இளம் தலைமுறையினரின் இசை, நடனம் மற்றும் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் முக்கியமான நிகழ்வாக அமைந்ததுடன், அவர்களை வழிநடத்தி வரும் ஆசிரியர்கள், நடுவர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் தளமாக அமைந்தது.
தமிழ் இசை, நடனம், மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுடன், கலைஞர்களையும் கலை ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் பணியைத் தொடர்ந்தும் தமிழிசைக் கலாமன்றம் முன்னெடுத்து வருகின்றது.
















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







