2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு!

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் தென் மாகாண நிகழ்ச்சி திட்டம் 24.10.2026 அன்று ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்துறையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தலா 20 மாணவர்கள் வீதம் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அம்மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இதற்கமைய, தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 03 மாவட்டங்களில் 2025 கல்வி ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவு ரீதியாகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதன்படி, 06 பாடப்பிரிவுகளின் கீழ் முதலாம் இடம் தொடக்கம் 20 ஆம் இடம் வரை பெற்ற 360 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக இந்த மாணவர்களின் எண்ணிக்கை இவ்வருடத்திலிருந்து இரட்டிப்பாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன,

கடந்த காலங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதியம், தற்போது பொதுமக்கள் நிதியமாக மக்கள் நலனுக்காக பரந்த அளவிலான பங்களிப்பைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்நாட்டு பிள்ளைகளின் கல்விப் பயணத்தை வலுப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி நிதியம் அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் உரையாற்றுகையில்,

நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான மற்றும் தரப்படுத்தப்பட்ட கல்வியை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அந்த இலக்கை அடைவதற்காக ஜனாதிபதி நிதியம் ஆற்றிவரும் பங்களிப்பையும் அமைச்சர் பாராட்டினார்.

தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மானவடு மாணவர்களிடையே உரையாற்றுகையில்,

பல்கலைக்கழக கல்வியின் போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக முன்னேறுவதற்குத் தேவையான சக்தியை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் முன்வந்துள்ளமையை பாராட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகேயும் இங்கு உரையாற்றினார்.

இந் நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் மற்றும் தென் மாகாண மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects