வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கள நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட 84 நவீன சிங்கிள் கெப் வாகனங்கள்!

இலங்கையின் வனவிலங்கு வளங்களைப் பாதுகாத்தல், மனித – யானை மோதலுக்குத் தீர்வு காணுதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கள நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் 84 நவீன சிங்கிள் கெப் வாகனங்கள் அந்தத் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில் இன்று (13.11.2026) காலை மஹர – கடவத்தையிலுள்ள டொயோட்டா நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை வரலாற்றில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துக்கு ஒரே தடவையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய வாகனத் தொகுதி இதுவாகும்.

இதன் மூலம் திணைக்களத்தின் மொத்த வாகனத் தொகை 294 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது திணைக்களத்திடம் 84 சிங்கிள் கெப் வாகனங்கள், 16 டபிள் கெப் வாகனங்கள், 3 குரூ கெப் வாகனங்கள், 181 மோட்டார் சைக்கிள்கள், 9 ட்ராக்டர்கள் மற்றும் ஒரு கை ட்ராக்டர் என மொத்தம் 294 வாகனங்கள் உள்ளன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் நீண்டகாலமாக நிலவிய மனித மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான விரிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

புதிய வாகனங்களைப் பகிர்ந்தளிப்பதில் மனித – யானை மோதல்கள் அதிகமாக இடம்பெறும் பகுதிகள் மற்றும் வன அழிவுகள் அதிகளவில் பதிவாகும் பிரதேசங்களிலுள்ள வனவிலங்கு அலுவலகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாகனத் தொகுதிகள் கள அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று கையளிக்கப்பட்ட 84 கெப் வாகனங்களின் மூலம் கள உத்தியோகத்தர்களின் போக்குவரத்துச் சிரமங்கள் குறைவதுடன், அவசர நடவடிக்கைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் திறனும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத் தலைமுறைக்காக இலங்கையின் வனவிலங்கு வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இதற்கு முன்னர் முன்னெடுக்கப்படாத வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உதய குமார, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன, டொயோட்டா லங்கா நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects