“ஹரித ரித்ம” (பசுமை லயம்) எனும் தொனிப்பொருளில் ஓவியம், சிற்பம் மற்றும் புகைப்படக்கலை தொடர்பான செயலமர்வு 18.11.2026 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச கட்புலக் கலைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
இதன் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றதுடன், ஏனைய பயிற்சிச் செயற்பாடுகள் மட்டக்களப்பு லேடி மெனிங் வீதியிலுள்ள மட்டக்களப்பு வாவிக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஓவியம், சிற்பம் மற்றும் புகைப்படக்கலை ஆகிய துறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்களின் கலைப் படைப்பாற்றலை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளும் இடம்பெற்றன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச கட்புலக் கலைக்குழுவின் தவிசாளர் பிரதீப் ரத்நாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களும் பங்கேற்றனர். அத்துடன், சிரேஷ்ட பேராசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
இயற்கையையும் கலைத்திறனையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் கலை உணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








