ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நிதியாண்டின் ஆரம்பம் முதலே அமைச்சுக்களும் நிறுவனங்களும் தமக்குரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடன் உறுதிக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரமே ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பங்களில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் திறைசேரிக்குத் திரும்புவதால், அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், பெரும்போக நெல் அறுவடையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் களஞ்சியசாலைகளில் எஞ்சியுள்ள நெல் கையிருப்புகளை அடுத்த பெரும்போக அறுவடை கிடைப்பதற்கு முன்னர் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நெல் கையிருப்புகளை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது கால்நடைத் தீவனம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects