மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விசேட மீளாய்வுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் இன்று (26.11.2026) நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, 2026ஆம் ஆண்டில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதனால் மீளாய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 205 கருத்திட்டங்களில் 192 வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன், ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற நிலை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளை மேய்ச்சல் தரைகளாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துதல், முந்தனை ஆறு அபிவிருத்தித் திட்டம், கிரான், பொண்டுகள்சேனை, மண்டூர் – குருமண்வெளி மற்றும் பட்டிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களை நிர்மாணித்தல் போன்ற முக்கிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், காட்டு யானை – மனித மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள், செங்கலடி – பதுளை வீதியில் யானை வேலி அமைத்தல், மட்டக்களப்பு வாவியைப் பாதுகாத்தல், வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையை இடமாற்றுதல், போதனா வைத்தியசாலையை விரிவுபடுத்துதல் மற்றும் மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, கால்நடை வளர்ப்பு, வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 2027ஆம் ஆண்டில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பில் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண செயலக உயர் அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects