யாழ் நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், இரண்டு எரிபொருள் பவுஸர்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கடல் வழியாகக் பாரிய படகு மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு கொண்டுசெல்லப்பட்ட எரிபொருள், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்துவதற்கான முக்கியமானதொரு கட்டம் எட்டப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட சிரமம் இருந்து வந்தது. இதற்காகத் தீவிலிருந்து குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதுடன், போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் மக்கள் எதிர்கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி நிகழ்வின்போது, நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டு வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளமை, நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நனவாக்கும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அவசர மருத்துவத் தேவைகள், கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இது துணைபுரியும்.

தீவுப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் மற்றுமொரு அடையாளமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects